அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுமார் 13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை வட இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டில் ஏற்கனவே இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சூழலில், தற்போது மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு அம்மாநிலத்தின் பல்வேறு சாலைகள், விவசாய நிலங்கள், வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 23 மாவட்டங்களில் உள்ள சுமார் 13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதுவரை வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1,109 கிராமங்களில், சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் திப்ருகர், ஜோர்ஹட் மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல், காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளநீர் புகுந்ததால் 41 விலங்குகள் உயிரிழந்த நிலையில், காண்டாமிருகம் உள்ளிட்ட பல விலங்குகள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.