குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற போலி சம்பவங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘போலி குஜராத் மாடல்’ என்று விமர்சித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்திய பிரதமர் குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிறிது நேரம் ஒதுக்கி பா.ஜ.க.வின் போலி குஜராத் மாடலை பார்ப்பார் என்று எதிர்பார்க்கிறேன். குஜராத்தில் நடைபெற்ற போலியான சம்பவங்களில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன். பா.ஜ.க அரசு கண்ணை மூடிக்கொண்டதா?.
கிரண் பாய் படேல் என்பவர் குஜராத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்புடன் பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் ராணுவத்தை ஏமாற்றுகிறார். அதிர்ச்சியூட்டும் வகையில், அவர் அரசாங்கத்தால் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த பகுதிகளான அமன் சேது உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விராஜ் படேல் என்பவர் குஜராத்தின் முதல்வர் அலுவலக அதிகாரி என்றும், அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியின் (GIFT City) சேர்மன் என்றும் கூறி மோசடி செய்தார். மே மாதம் கைது செய்யப்பட்ட பிறகும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பினார். 2023, இறுதியாக, அவர் சமீபத்தில் அசாம்-மிசோரம் எல்லையில் பிடிபட்டார். மேலும், அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மருமகன் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, மோர்பி மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்த ஒரு போலி சுங்கச்சாவடி, வாகனங்களில் இருந்து ₹75 கோடிக்கு மேல் வசூலித்தது. இதே போல், ஜூனாகத் மாவட்டத்தில் பயணிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் வசூல் செய்த மற்றொரு போலி சுங்கச்சாவடி இறுதியாக பிடிபட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறையுடன் தொடர்புடைய 6 போலி அரசு அலுவலகங்கள் இயங்கி வந்ததால் ₹18.59 கோடி மதிப்பிலான மோசடி நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் சோட்டா உடேபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாவட்டத்தின் போடேலி தாலுகாவில் போலி அரசு அலுவலகம் அமைத்து, அரசு அதிகாரி போல் போலி கையெழுத்து, அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடிக்கு மேல் அரசு மானியம் பெற்றுள்ளனர். எனவே, பா.ஜ.க.வின் குஜராத் மாடல் என்பது ஒரு பொய்யான மாடலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.