காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைபயணத்தை நடத்தப் போவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் பாரத் ஜோடா நியாய யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) இலச்சினையை இன்று (06-01-24) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மணிப்பூரில் இருந்து மும்பைக்கு சுமார் 6,200 கி.மீ தூரம் கொண்ட இந்த நீண்ட பயணம் ஜனவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு 14 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த நடைபயணம் 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராகுல் காந்தி 3 பிரச்சனைகளை எழுப்பி பேசினார். அது, பொருளாதார சமத்துவமின்மை, சமூக துருவமுனைப்பு மற்றும் அரசியல் சர்வாதிகாரம் ஆகியவையாகும். ஆனால், இந்த ‘பாரத நியாய யாத்திரை’யின் முக்கிய பிரச்சினைகளாக பொருளாதார நீதி, சமூக நீதி மற்றும் அரசியல் நீதி ஆகியவற்றை பேசவுள்ளார். நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்சனையை எழுப்ப அரசாங்கல் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. எனவே தான் காங்கிரஸ் பாரத் ஜோடா நியாய யாத்திரையை மேற்கொள்கிறது. இதன் மூலம், மக்களிடம் நாங்கள் நியாயம் கேட்போம்.
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றது. அங்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை, ஆனால், மோடி எங்க சென்றாலும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். காலை விழித்தவுடன் கடவுளை தரிசிப்பது போல் எங்கு பார்த்தாலும் மோடியின் புகைப்படம் தான் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பிரதமர் மோடி தவறுதலாக பயன்படுத்துகிறார்” என்று கூறினார்.