மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் சுபாஷ் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுகள் வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 6,888 விவசாயிகள் மாநில அரசின் நிவாரண உதவிகளை பெற தகுதியுடையவர்கள் என தெரிவித்தார். இது வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 6,845 பேருக்கு மாநில அரசின் நிவாரணமாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அவர்களின் 192 பேர் மாநில அரசின் நிவாரணம் பெற தகுதியுடையவர்கள் என அமைச்சர் சுபாஷ் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு விவசாயிகள் தற்கொலை என்றால், மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் நிலை என்ன? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.