மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் புகழுக்கு தன்னால் களங்கம் ஏற்படுவதால் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். இதனால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின், சகோதரி மகனான அஜித் பவார், பாராமதி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை அம்மாநில சபாநாயகரின் செயலரிடம் வழங்கினார். இதனால் அக்கட்சியின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித் பவார் உள்ளிட்ட 75 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், மாநில கூட்டுறவு வங்கி ஊழலில் தன்னுடைய பெயர் இருப்பதாகவும், அதனால் கட்சிக்கும், சரத்பவாரின் களங்கம் ஏற்படுவதால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமாக செய்ததாக கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி முறைகேட்டில் சரத்பவாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார்.
சரத்பவாரை கலந்து ஆலோசிக்காமல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அஜித் பவார் எடுத்ததால், சரத்பவார் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 21- ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி விவகாரம், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.