மகாராஷ்ட்ராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 18 நாட்களாக நீடித்து வருகிறது.
நேற்று பாஜகவை அடுத்துள்ள சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் கோரியுள்ளார். இதனிடையே சிவசேனா பெரும்பான்மையை பெற தேசியவாத காங்கிரஸிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவசேனாவிடம் பாஜகவிலிருந்து முற்றிலுமாக விலகினால் இதைபற்றி முடிவு செய்யலாம் என்று திட்டவட்டமாக கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதன்பொருட்டு, பாஜக சிவசேனா உடனான பத்து வருட நட்பு முற்றிலுமாக முடிகிறது என்று தெரிகிறது.
இந்நிலையில் மஹாராஷ்ட்ராவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் தேவேந்திர பத்னாவிஸ் தலைமையில் இன்று அவருடைய வீட்டில் ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்கள் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு விரைகின்றனர். தேசியவதா காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்களும் சரத் பவார் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.