தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அம்பர்பெட்டில், கோலனகா திருமலா ஸ்ரீனிவாஸ் - விஜயலக்ஷ்மி தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். புடவை வியாபாரம் செய்துவரும் இவர், தையல் போன்ற வேலைகளையும் செய்துவருகிறார். சமீபத்தில் இவர் மனைவிக்கு ஒரு ப்ளவுஸ் தைத்துக் கொடுத்துள்ளார். ஆனால் கேட்ட டிசைனைக் கணவன் தைத்துக் கொடுக்கவில்லை என்று கோபமடைந்த மனைவி சண்டை போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் இந்தத் தையலை நீயே சரிசெய்து, உனக்குப் பிடித்தது போல் தைத்துக்கொள் என்று கோவமாகக் கூறிவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் தன் தாயைத் தேடிய நிலையில், மூடியிருந்த படுக்கையறையின் கதவை மீண்டும் மீண்டும் தட்டியுள்ளனர்.
அறையிலிருந்து எந்தச் சத்தமும் இல்லாததால், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் குழந்தைகள் கூறியுள்ளனர். அவர்களும் அறையைத் திறக்க முயற்சி செய்துவிட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது கொலையா? தற்கொலையா? என போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.