உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை (09.10.2021) வன்முறை தொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவை 12 மணிநேர விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து நீதிமன்றம் அஷிஸ் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில், லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இன்று (11.10.2021) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. மஹராஷ்ட்ராவில் ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மும்பை உட்பட மஹாராஷ்ட்ரா முழுவதும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் பேருந்துகள் ஓடவில்லை. பல இடங்களில் சந்தைகள் செயல்படவில்லை. இது மட்டுமின்றி தானேவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்தினர்.
மேலும் சிவசேனா தொண்டர்கள், புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோலாப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி, மஹாராஷ்ட்ரா ஆளுநர் மாளிகை முன்பு 'மௌன விரத' போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பையில் நேற்று இரவிலிருந்து தற்போதுவரை ஒன்பது பேருந்துகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.