பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நமது உலகில் விவசாயி ஒருவரின் நேர்மை பலரையும் நெகிழ வைத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் சாதரா பகுதியை சேர்ந்தவர் தனஞ்ச் ஜெக்தலே (54) தாகிவாடி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளார். தனது ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் எடுக்க 10 ரூபாய் தேவைப்பட்ட நிலையில், அவரிடம் 3 ரூபாய் மட்டும் இருந்துள்ளது. டிக்கெட் எடுக்க 7 ரூபாய் குறைவாக இருந்த நிலையில், பேருந்து நிலையத்தில் அவரது அருகே ஒரு பை கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது அதன் உள்ளே ரூ.40,000 இருந்துள்ளது.
ஆனால் தன்னிடம் பணம் இல்லாத அந்த நிலையிலும், அந்த பணப்பை யாருடையது என்பது குறித்து அங்கு விசாரித்துள்ளார். அப்போது அங்கு பதட்டத்துடன் சுற்றி திரிந்த ஒரு நபர், தனது மனைவி அறுவை சிகிச்சைக்காக கொண்டு வந்த பணத்தை தொலைத்துவிட்டதாக தேடிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் தெளிவாக விசாரித்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு அவரிடம் ஜெக்தலே பணத்தை கொடுத்துள்ளார். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் ஜெக்தலேவுக்கு 1000 ரூபாயை அன்பளிப்பாக அவர் கொடுத்துள்ளார். ஆனால் ஜெக்தலே அந்த பணத்தை வாங்க மறுத்ததோடு, தனது டிக்கெட்டுக்கு தேவையான 7 ரூபாயை மட்டும் வாங்கி கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். இந்த செய்தி வெளியில் பரவிய நிலையில், அப்பகுதி எம்.எல்.ஏ உட்பட பல அரசியல் தலைவர்கள், பொதுமக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதில் அமெரிக்காவில் வசித்து வரும் ராகுல் பார்க் என்பவர் ஜெக்தலேவின் நேர்மையை பாராட்டி ரூ .5 லட்சம் தருவதாக அறிவித்தார். ஆனால் அத்தனையும் மறுத்த ஜெக்தலே, "ஒருவரின் பணத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் ஒருவருக்கு திருப்தி கிடைக்காது என்று நான் நினைக்கிறேன். நான் பரப்ப விரும்பும் ஒரே செய்தி மக்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்பதே" என்று கூறினார். வறுமையிலும் ஜெக்தலே கடைபிடிக்கும் நேர்மை பலரையும் நெகிழ வைத்துள்ளது.