மத்தியப் பிரதேச அரசியலில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தருவதாகப் பேரம் பேசி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 26 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஜோதிராதித்ய சிந்தியா தரப்புக்கு சீட் வழங்குவதில் கமல்நாத் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்ததாகவும், ஜோதிராதித்ய சிந்தியா தரப்புக்கு சீட் கொடுக்காமல் இருப்பதற்காகவே பிரியங்கா காந்தியை மத்தியப் பிரதேசத்தில் போட்டியிட வைக்க கமல்நாத் முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும்பட்சத்தில் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 230 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 114 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது, பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படும் சிந்தியாவின் பதவி விலகல் காங்கிரஸ் கட்சிக்குச் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.