வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு வருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.
இந்தச் சூழலில் மத்திய அரசு விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தது. அதுதொடர்பாக நேற்று (07.12.2021) ஆலோசித்த விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்துவரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, "நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகே, விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று அரசாங்கம் கூறுகிறது. நாங்கள் அதைப் பற்றி அச்சப்படுகிறோம். வழக்குகளைத் திரும்பப் பெறும் நடைமுறையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் (போராட்டத்தை கைவிடுவது) இறுதி முடிவு எடுக்கப்படும். 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாப் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறோம். பஞ்சாப் அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் இழப்பீடு மற்றும் வேலை என்பதை இந்திய அரசும் செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்தது.
இந்நிலையில் இன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் ஐந்து பேர் கொண்ட கமிட்டியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான குர்னாம் சிங் சாருனி, "எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும். நாங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றால் எங்களுக்கு அது பிரச்சனையாக இருக்கும். வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஐவர் கமிட்டியின் இன்னொரு உறுப்பினர் அசோக் தவாலே, "அரசின் முன்மொழிவில் சில குறைபாடுகள் இருந்தன. எனவே நேற்று இரவு, சில திருத்தங்களுடன் அதைத் திருப்பி அனுப்பினோம். அதில் அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகு எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அரசு கூறியது தவறு. குளிரில் இங்கே உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பிடித்தமான ஒன்றல்ல. அவர்கள் (மத்திய அரசு) மின்சார மசோதாவை திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் இப்போது அவர்கள் அதைப் பங்குதாரர்களுடன் விவாதித்து, பின்னர் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள். இது முரண்பாடானது" என கூறியிருந்தார்.