பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவர் ராக்கி கட்டிவிட்டால் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்ற மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பக்கத்துக்கு வீட்டுக்காரரால் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணுக்கு, தொல்லை கொடுத்தவர், கையில் ராக்கி கட்டிவிட்டு ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, உடை மற்றும் இனிப்புகள் வாங்க 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம். பாலியல் தொல்லை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 9 பெண் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.