இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்துவருகிறது. அதேநேரத்தில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். இதற்கிடையே, கரோனா எதிர்ப்பு சக்தி மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு இருக்கிறது என்பதைக் கண்டறியும் செரோ (SERO) ஆய்வையும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நடத்திவருகிறது.
ஏற்கனவே மூன்று கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 70 மாவட்டங்களில் 28,975 பொதுமக்களிடமும், 7,252 சுகாதாரப் பணியாளர்களிடமும் நடத்தப்பட்ட நான்காம் கட்ட செரோ ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகிவருகிறது.
அந்தவகையில், கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிக்கள் எந்த மாநில மக்களிடையே அதிகமாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மக்களிடம் கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அம்மாநில மக்களில், 79 சதவீத பேரின் உடல்களில் கரோனா ஆன்டிபாடிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அம்மாநிலத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் 76.2 சதவீத பேரிடம் கரோனா ஆன்டிபாடிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கடுத்ததாக பீகாரில் 75.9 சதவீத மக்களிடமும், குஜராத்தில் 75.3 சதவீத மக்களிடமும், சத்தீஸ்கரில் 74.6 சதவீத மக்களிடமும் கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 10வது இடத்தில் உள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்களில் 69.2 சதவீத பேருக்கு கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. நாட்டிலேயே கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் குறைவாக உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் 44.4 சதவீதம் பேருக்கே கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.