மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், மும்பையில் நேற்று (02/10/2021) கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்கள் தடைச் செய்யப்பட்டப் போதைப்பொருட்களைப் பயன்படுத்தினர். இது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், அந்த சொகுசுக் கப்பலைச் சுற்றி வளைத்து, கப்பலுக்குள் சென்று பார்த்தபோது, தடைச் செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்டுத்தியது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, பார்ட்டியில் பங்கேற்றவர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்று (03/10/2021) காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே கூறுகையில், "பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் மும்பையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசுக் கப்பலில் இருந்து கோகைன், ஹர்ஷிஷ், எம்.டி. உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சொகுசுக் கப்பலின் உரிமையாளர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் எஸ்என் பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரண்டு வாரமாக புலனாய்வு செய்து மும்பையில் சொகுசு கப்பலில் சோதனை நடத்தப்பட்டது" என்றார்.