Skip to main content

‘பைத்தியம்’ என்று திட்டியதால் ஆத்திரம்; தாயை கொடூரமாகக் கொலை செய்த மகன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
lost her lives his mother for Rage at being called crazy in delhi

டெல்லி அருகே குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரானுஷா (59). இவருக்கு கணவர் மற்றும் மகன் அத்ரிஷ் (27) ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். மகன் அத்ரிஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அத்ரிஷ், தனது பெற்றோரிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (10-03-24) இரவு ரானுஷாவுக்கும், அத்ரிஷுக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அத்ரிஷ், அங்கு இருந்த கத்தியை வைத்து தனது தாய் ரானுஷாவை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அத்ரிஷ், தனது வீட்டுக்கும் தீ வைத்துள்ளார். இதனைக் கண்டு பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வீட்டுக் கதவை உடைத்து ரானுஷாவை மீட்டனர்.

கத்திக்குத்து காயம் மற்றும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரானுஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அத்ரிஷ் அடிக்கடி தாயுடன் சண்டைபோட்டு அவரைத் தாக்கி வந்துள்ளார்.

அந்த வகையில், நேற்று நடந்த வாக்குவாதத்தின் போது ‘பைத்தியம்’ என்று ரானுஷா அத்ரிஷை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அத்ரிஷ், தனது தாயை கத்தியால் கொலை செய்ததும், பின்னர் வீட்டுக்குத் தீ வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, தனது தாயை கொலை செய்த அத்ரிஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.