உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரா கோஸ் இன்ற (சனிக்கிழமை) காலை இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
கடந்த செவ்வாய்கிழமையன்று இந்தியாவின் முதல் லோக்பால் தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் எம். வெங்கையா நாயுடு மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைப்பு உருவாகியுள்ளது. இதில் நீதிபதி பினாக்கி சந்திராவை தவிர, நீதிபதி திலிப் பி. போசலே, நீதிபதி பி. மோகந்தி, நீதிபதி அபிலாஸ் குமாரி, நீதிபதி ஏ.கே. திரிபாதி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.மேலும் குழு உறுப்பினர்களாக தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங் மற்றும் ஐ.பி. கௌதம் ஆகியோர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக்பால் அமைப்பில் மூன்று உறுப்பினர்கள், ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர், நீதித்துறை மற்றும் நீதித்துறை அல்லாத உறுப்பினராக எட்டு பேர் உள்ளனர்.