இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வந்து மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே-19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே-23 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் உடனுக்குடன் அறியும் வகையில் பிரத்யேக இணைய தள முகவரியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதற்கான இணைய முகவரி : https://results.eci.gov.in/ அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் 'Voter Helpline' என்ற மொபைல் செயலியை டவுன்லோடு செய்து தேர்தல் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும், வாக்கு பதிவு இயந்திரங்களுடன் (EVMs) ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் 25% விவிபேட் இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவர காலதாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.