இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 21 ஆம் தேதி மட்டும் 30 ஆயிரத்து 535 பேருக்கு கரோனா உறுதியாகிவுள்ளது. ஒரேநாளில் ஒரு மாநிலத்தில் இத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதியானது அதுவே முதன்முறையாகும். இதனைத் தொடர்ந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளர்களோடு மட்டுமே இயங்க வேண்டும், திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மஹாராஷ்ட்ரா அரசு விதித்தது. மேலும், அரசு நிறுவனங்கள், பணியாளர்களின் வருகை குறித்து முடிவெடுக்க அனுமதியளித்தும், உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கவும் மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் அங்கு கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இந்தநிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்டத்தின் ஆட்சியர் பிறப்பித்தார். மார்ச் 26 தேதியிலிருந்து ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள இந்த ஊரடங்கில், அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.