இந்தியாவில் கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,129 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 714 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, கரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் முழு முடக்கம் அமல்படுத்த இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் எனவும், முழுமுடக்க நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலக ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணிபுரிய வேண்டும். தற்போதைய கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.