இரண்டு மாதகாலமாக சம்பளம் தர மறுத்து வரும் நிலையில், சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும் என மும்பை போலீஸ் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர் தியானேஸ்வர் அஹிர்ராவ். இவர் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தியானேஸ்வரின் மனைவிக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் அவசர விடுப்பில் சென்றிருக்கிறார்.
இரண்டு நாட்கள் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பியிருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கையில் பெரிதும் இன்னல்களைச் சந்தித்த தியானேஸ்வர், ‘என் மனைவியின் உடல்நிலையைக் கவனிப்பதற்காக இரண்டு நாட்கள் அவசர விடுப்பு எடுத்தேன். அதற்காக எனக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்கள். என் வருமானத்தை நம்பியே என் குடும்பம் இருக்கிறது. குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வங்கியில் கடன்வாங்கி, மாதத் தவணைகளை செலுத்திவருகிறேன். இதனால், என் குடும்பமே மிகப்பெரிய சோதனையில் சிக்கியிருக்கிறது. எனவே, சீருடை அணிந்து நான் பிச்சையெடுக்க அனுமதி வழங்கவேண்டும்’ என மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.