அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதிக்கு அருகே உள்ள செனிஜான் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியே வருவதால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் ஒருவித பயத்துடனே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.
இந்நிலையில், காட்டைவிட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, மழைக்காடு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் சுற்றித் திரிந்தது. அதன்பிறகு, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை குழந்தைகள், பெரியவர்கள் என 15-க்கும் மேற்பட்ட நபர்களைக் கடித்துக் குதறியது. இதனால், குலைநடுங்கிய செனிஜான் கிராம மக்கள் என்ன செய்வது என தெரியாமல் ஆளுக்கு ஒரு திசையில் சிதறி ஓட தொடங்கினர்.
அப்போது, அந்த வழியே வந்த டூவீலர் மற்றும் கார்களில் வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையைப் பார்த்தவுடன் ரிவர்ஸில் தங்களது வாகனத்தை திருப்பிச் சென்றனர். அந்த சமயத்தில், குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரிந்த சிறுத்தை திடீரென காம்பவுண்ட் வேலியைத் தாண்டி குதித்து அங்கிருந்த காருக்குள் பாயச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாகன ஓட்டி காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். இந்த சம்பவத்தை மற்றொரு காரில் இருந்த நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும், இந்த சிறுத்தையை பிடிக்க சென்ற 3 வனத்துறை அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு சிறுத்தை பிடிபட்டது. மேலும், சிறுத்தையால் காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராத நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையால் செனிஜான் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.