Skip to main content

மூன்று நியூ என்ட்ரி.. ஹரியானா, பீகாரையும் குறிவைக்கும் மம்தா!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

mamata

 

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

 

இதனையொட்டி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிற கட்சித் தலைவர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தங்கள் பக்கம் இழுத்துவருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அண்மைக்காலமாக திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துவருகின்றனர்.

 

இந்தநிலையில் நேற்று (23.11.2021) டெல்லியில், 2019ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதால் காங்கிரஸுக்குத் தாவிய பீகாரைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கீர்த்தி ஆசாத், மம்தா தலைமையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். அதேபோல் பீகாரைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை எம்.பி பவன் வர்மாவும் மம்தா தலைமையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆலோசகராக இருந்த பவன் வர்மா, கடந்த ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இவர்களைப்போலவே ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும், அம்மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்தவருமான அசோக் தன்வார் நேற்று மம்தா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகிய அசோக் தன்வார், தனிக் கட்சி ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஹரியானா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களைக் கட்சியில் இணைத்துள்ளது மூலம் அம்மாநிலங்களுக்கும் திரிணாமூல் காங்கிரஸை விரிவுபடுத்த மம்தா முயற்சிப்பதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, மம்தா பானர்ஜி இன்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்