இந்தியாவின், 'இ.ஓ.எஸ்-01' புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் (PSLV-C 49).
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின், இ.ஓ.எஸ்.-01 செயற்கைக்கோள் மற்றும் வணிக ரீதியாக 9 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது பி.எஸ்.எல்.வி.-சி 49. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில், அனைத்துச் செயற்கைக்கோள்களும் ஒவ்வொன்றாக ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தன. அதைத் தொடர்ந்து அனைத்துச் செயற்கைக்கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதல் செயற்கைக்கோளாக இந்தியாவின் இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் பிரிந்தது. இந்தியாவின் செயற்கைக்கோளை அடுத்து அனைத்துச் செயற்கைக்கோள்களும் ஒவ்வொன்றாக ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தன.
அதைத் தொடர்ந்து அனைத்துச் செயற்கைக்கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தீபாவளிக்கு முன்பே ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளோம். கரோனா காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு, ராக்கெட்டை வடிவமைத்தோம். பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் ஏவுதலில் பங்காற்றிய தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. பி.எஸ்.எல்.வி.-சி 50 ராக்கெட், சி.எம்.எஸ்- 01 செயற்கைக்கோளையும், புதிய ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி, இ.ஓ.எஸ்-02 செயற்கைக்கோளையும் ஏவ உள்ளது. வரும் காலத்தில் ஜி.எஸ்.எல்.வி-எஃப் 10 ராக்கெட் இ.ஓ.எஸ்- 03 செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது". இவ்வாறு இஸ்ரோ தலைவர் பேசினார்.
கரோனா பாதிப்புக்கிடையே, இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி.-சி 49ஐ ஏவியது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.