Skip to main content

லக்கிம்பூர் வன்முறை; வெளியான தடய அறிவியல் அறிக்கை- இணையமைச்சர் மகனுக்கு அதிகரிக்கும் சிக்கல்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

ASHISH MISRA

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவை சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

 

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவும், அவரது அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை குறித்து உத்தரப்பிரதேச அரசு மீதும், காவல்துறை மீதும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, வழக்கின் விசாரணையை கண்காணிக்க உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

 

இதற்கிடையே ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர் அங்கித் மிஸ்ரா ஆகியோரின் உரிமம் பெற்ற துப்பாக்கியைக் கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் தடய அறிவியல் ஆய்வகம் தனது ஆய்வு அறிக்கையில், ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அங்கித் மிஸ்ரா ஆகிய இருவரின் துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சுடப்பட்டதை உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

தனது மகன் வன்முறை நிகழ்ந்த இடத்தில் இல்லை எனக் கூறி வந்த நிலையில், தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கை அவருக்கும் அவரது மகனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அறிக்கையால் ஆஷிஸ் மிஸ்ரா மீதான பிடி இறுகும் எனக் கருதப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்