Skip to main content

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்; இந்து முன்னணியினர் அதிரடி கைது!

Published on 16/11/2024 | Edited on 16/11/2024
 Hindu leaders arrested for issue of being thrown at the theater

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில், இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர், காஷ்மீர் மக்களின் விடுதலை எண்ணத்தை பயங்கரவாத நோக்கில் காட்சிப்படுத்துவதாகக் கூறி அமரன் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக சென்னையிலுள்ள பல்வேறு திரையரங்குகளில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 

இதனிடையே, அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு வந்த திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் இன்று அரங்கேறியது. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியிலுள்ள திரையரங்கம் ஒன்றில், அமரன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. அந்த திரையரங்கில், இன்று அதிகாலை இரண்டு மர்ம நபர்கள், மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திரையரங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஜெயக்குமார் என்பவர், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கிற்கு ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு இன்று வந்திருந்தார். அப்போது, ‘பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த திரையரங்கிற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை’ என திருநெல்வேலி துணை ஆணையர் விஜயக்குமார், ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த, இந்து முன்னணியினருக்கு, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்து முன்னணி துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்