Skip to main content

கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள்; பதற்றத்தில் மணிப்பூர்!

Published on 12/11/2024 | Edited on 16/11/2024
3 Children and 3 Women Missing in manipur

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியது.

இந்த வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இதனை தொடர்ந்து, மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு படையினருக்கும், குக்கியினத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினருக்கும் இடையே நேற்று(11-11-24) மோதல் சம்பவம் நடைபெற்றது. ஆயுதக் குழுவினர் இரு திசைகளில் இருந்து காவல் நிலையத்தில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியபோது இந்த மோதம் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனத் தகவல்கள் வெளியானது. இந்த என்கவுண்டர் சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவரும் படுகாயமடைந்தார் எனவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று என்கவுண்டர்கள் நடந்த அதே வேளையில், மணிப்பூரைச் சேர்ந்த 13 பேர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அதில், மெய்தி சமூகத்தை 2 ஆண்களின் உடல்கள், பயங்கரவாதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன 5 பேரை கண்டுபிடித்த நிலையில், மீதமுள்ள 6 பேரை கண்டுபிடிக்க தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குக்கி ஆயுதக்குழுவினர் 11 பேர் என்கவுண்டரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மெய்தி இனத்தை சேர்ந்த 60, 31, 25 ஆகிய வயதுடைய பெண்களும், 3 குழந்தைகளும் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்