கேரளாவில் பெட் ஷாப் கடை ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி கல்லூரி மாணவனும் மாணவியும் குட்டி நாயை ஹெல்மெட்டில் திருடிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பெட் ஷாப் ஒன்றுக்கு இன்ஜினியரிங் மாணவரும் மாணவியும் சென்றுள்ளனர். அப்பொழுது அங்குள்ள செல்லப்பிராணிகளை பார்ப்பது போல் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த இருவரும், கடை ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு அங்கு கூண்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாய்க்குட்டியை ஹெல்மெட்டுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
அதன் பின்பு கடை உரிமையாளர் கூண்டிற்குள் நாய் இல்லாததை அறிந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் கடைக்கு வந்திருந்த மாணவனும் மாணவியும் நாய்க்குட்டியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட நாய்க்குட்டியின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில், போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் நாய்க்குட்டியை திருடிய இருவரும் உடுப்பி சென்றது தெரியவந்தது. வாகன எண்ணை வைத்து திருடியவர்கள் வீட்டுக்குச் சென்ற போலீசார் நாய்க்குட்டியை மீட்டனர்.
இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பொறியியல் படித்து வந்த மாணவன், மாணவி என்பதும், பைக்கிலேயே இருவரும் கேரள மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.