மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் மோதல் வெடித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது மம்தாவிற்கும் அவரது மருமகனும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே அதிகாரப்போட்டி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் மம்தா அண்மையில் தளர்த்திய ஒரு கட்சி, ஒரு பதவி விதியை, மீண்டும் அமல்படுத்த வேண்டுமென அபிஷேக் பானர்ஜி குரலெழுப்பி வருகிறார். இது கட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்துள்ள மூத்த தலைவர்களை அதிருப்தியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை மேற்கு வங்க அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, கட்சி, ஒரு பதவி விதிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த ட்விட் நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சந்திரிமா பட்டாச்சார்யா, தனக்கு தெரியாமல் ஐ-பேக் இந்த ட்விட்டை வெளியிட்டதாக தெரிவித்தார்.
ஆனால் ஐ-பேக் நிறுவனம், தாங்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களையோ, அக்கட்சியின் தலைவர்களுடைய சமூக வலைதள பக்கங்களையோ நிர்வகிக்கவில்லை என விளக்கம் அளித்தது. இது மேற்குவங்க அரசியல் வட்டராங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச்சூழலில், கட்சியின் மூத்த தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி இன்று மாலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சிக்குள் முளைத்துள்ள கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.