வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா அரசு விழாவில் பங்கேற்கச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய இணை அமைச்சர் மகனின் காரை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனால் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விவசாயிகளின் புகாரின் பேரில் 14க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அதேபோல் வன்முறை நடைபெற்ற லக்கிம்பூர் பகுதிக்கு வரவிருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாதல், பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுகிந்தர் ரன்தவா ஆகியோர் லக்னோ விமான நிலையம் வர உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல் லக்கிம்பூர் பகுதிக்குச் செல்ல முயன்ற உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது வீட்டின் வாசலிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அவர் தனது வீட்டு வாசலிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் அகிலேஷ் யாதவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு பேசிய அகிலேஷ் யாதவ், "எந்த அரசியல் தலைவரும் லக்கிம்பூருக்குச் செல்வதை அரசு விரும்பவில்லை. அரசு எதை மறைக்கிறது? இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிராக செய்யும் கொடுமைகளைப் பிரிட்டிஷ்காரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள். உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவும் துணை முதல்வரும் உடனடியாக பதவி விலக வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 2 கோடி ரூபாயும் அரசு வேலையும் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.