Skip to main content

“கமல்ஹாசன் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களைக் குறை கூறுகிறார்” - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
JP Nadda alleges Kamal Haasan for kallakurichi issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மெளனம் காத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் 56 பேர் உயிரிழந்து, 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளின் கொடூரமான காட்சிகள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.  மல்லிகார்ஜுன கார்கே, கருணாபுரத்தில் பட்டியலின சாதியினர் அதிகம் வசிக்கின்றனர் என்று  உங்களுக்குத் தெரியும்.  அவர்கள் தமிழ்நாட்டில் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பேரழிவு வெளிச்சத்திற்கு வந்தபோதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ், இது குறித்து மௌனம் காத்து வருவதைக் கண்டு, ​​​​நான் அதிர்ச்சியடைந்தேன். சிபிஐ விசாரணைக்குச் செல்லவும்,  அமைச்சர் எஸ். முத்துசாமியை அவரது பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்வதையும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க-இந்தியா கூட்டணி அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.    

இன்று நீங்கள் நியாயமாக நடக்க வேண்டிய நேரம் இது. இன்று தமிழக மக்களும், ஒட்டுமொத்த பட்டியலின சமூகமும் சாட்சியாக உள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்களின் இரட்டை பேச்சு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நீது மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி குறை கூறுகிறார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில் குரல் எழுப்புவதற்கு தைரியத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்