தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது 35,000 கனஅடி நீர் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கின்ற நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டிய ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினால் தமிழகத்திற்கான நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதால் சுற்றலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் சவாரி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.