Skip to main content

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000; காங்கிரஸை விமர்சிக்கும் குமாரசாமி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

 kumarasamy talks about karnataka family women 2 thousand amount scheme

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து கர்நாடகாவில் அமல்படுத்த உள்ள இலவச மின்சார திட்டம் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பொருந்தாது என்று மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி கூறியது என்ன. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றனர். வீடுகளுக்கு 200 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றனர். ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு இந்த திட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது.

 

தற்போது சமூக வலைத்தளங்களில் தோசை கதை வைரலாகி வருகிறது. அதாவது ஹோட்டல்களில் தோசை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து விட்டு அதே நேரம் தோசைக்கு வைக்கும் சட்னிக்கு அதிக விலை வாங்குகிறார்களாம். அதுபோல தான் காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்கள் நிபந்தனையின்றி வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு தற்போது விதிமுறைகளை வகுத்து வருகின்றனர். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கிடைக்காது என்று முதல்வர் கூறுகிறார். இது குறித்து மக்களிடம் எடுத்து கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.  


 

சார்ந்த செய்திகள்