கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தன் பக்கம் இழுத்து ஆட்சியை கலைக்க முயல்வதாக பல நாட்களாக அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குமாரசாமி, ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 10 கோடி ரூபாய் வரை தர பாஜக தயாராக இருப்பதாக தெரிவித்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், " எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு பாஜக தலைவர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பு வந்ததும் எங்கள் எம்.எல்.ஏ என்னை அழைத்தார். ஜே.டி (எஸ்) கட்சியை விட்டு பாஜகவில் சேர ரூ .10 கோடி தருகிறேன் என கூறுகிறார்கள், நான் அதனை மறுத்துவிட்டேன் என்று கூறினார். இது மாதிரியான முயற்சிகள் பாஜக தலைவர்களால் தொடர்ந்து செய்யப்படுகின்றன. ஆனால் இந்த அரசு மக்கள் ஆதரவுடன் இன்னும் 4 வருடங்களுக்கு தொடரும்" என தெரிவித்தார்.