கோர்க்காலாந்து போராட்டத்தால் விலையேறிப்போன டார்ஜிலிங் டீ!
மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் விளையும் தேயிலை உலகப் பிரசித்து பெற்றது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோர்க்காலாந்து என்ற தனி மாநில கோரிக்கையை முன்வைத்து, கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. போராட்டம் பின்னர் கலவரமானதால் காலவரையறையின்றி தொடர்ந்தது.
இதனால் டார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியும் கணிசமாக குறைந்தது. கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தாலும், விற்பனையாளர்களிடம் போதுமான அளவு இருப்பு இல்லாததால் டார்ஜிலிங் தேயிலைக்கு பற்றாக்குறையும், அதைத் தொடர்ந்து விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
ரூ.500 க்கு விற்கப்பட்ட தேயிலை ரூ.1,000 க்கும், ரூ.1,000 க்கு விற்கப்பட்ட தேயிலை ரூ.2,000 க்கும் விற்பனையாகிறது. மேலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேயிலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால், ரூ.250 கோடிக்கும் மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டார்ஜிலிங் மாவட்டத்தில் மொத்தம் 87 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த போராட்டங்களால், கடந்த ஆண்டு ஜூன் மாத உற்பத்தியை விட, தற்போதை நிலையில் உற்பத்தி 90% சரிவைச் சந்தித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்