தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (07-11-23) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதே போல், மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி பா.ஜ.க சார்பில் சூரஜ்பூர் நகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (08-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “பட்டியலின மக்களின் நலனில் காங்கிரஸ் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. ஆனால், பட்டியலின குழந்தைகளின் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியது பா.ஜ.க என்ற ஒரே கட்சி தான்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழிப்பறி சம்பவங்களும், கொலை சம்பவங்களும் அதிகப்படியாக நடந்துள்ளது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பயங்கரவாதிகளும், நக்சலைட்டுகளும் அதிகமாக இருந்தனர். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றம் மற்றும் கொள்ளையின் ஆட்சிதான் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது” என்று கூறினார்.