இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி, சிறந்த மருத்துவரும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வருமான பிதன் சந்திர ராயின் சாதனைகளைப் போற்றும்விதமாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலமற்று சேவை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தேசிய மருத்துவர் தினத்தையோட்டி பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவ கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் மருத்துவ சமுதாயத்திற்கு உரையாற்றினார். அப்போது சுகாதார துறையை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.
மருத்துவ சமுதாயத்திற்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:
130 கோடி இந்தியர்கள் சார்பாக, அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நமது மருத்துவர்கள், அவர்களின் அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை இந்த கரோனா வைரஸை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது. பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பாகியுள்ளது.
சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில், சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.50,000 கோடி கடன் உத்தரவாத திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.இன்று நமது மருத்துவர்கள் கரோனா தொடர்பான நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துகின்றனர். முன்பு மருத்துவ உள்கட்டமைப்பு எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். அனைத்து சிக்கல்களுக்கும் மத்தியிலும், இந்தியாவின் நிலை மற்ற வளர்ந்த நாடுகளை விட எதாவது ஒரு இடத்தில் நிலையாக இருந்தது.
அனைவரும் விழிப்புணர்வுடன் கரோனா பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்களில், மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யோகாவை ஊக்குவிக்க முன்வருகின்றனர். கரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பல நவீன மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் ஆய்வுகள் செய்கின்றன. இவ்வாறு மோடி உரையாற்றினார்.