கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் அதானி பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், பள்ளியில் இருந்து திரும்பி வந்து தங்களுடைய வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மாருதி காரில் இருந்து முகமூடி அணிந்தபடி அடையாளம் தெரியாமல் வந்த 2 நபர்கள், வீட்டுக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கடத்திச் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி, கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் எண்ணை வைத்து வைத்து அவர்களை போலீசார் கண்டுபிடித்து பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் போலீசாரை தாக்க முயன்றால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை பிடித்தனர். மேலும், கடத்தப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபரான குழந்தைகளின் தந்தை, கடத்தக்காரர்களுக்கு 7 கோடி ரூபாய் கடன்பட்டிருப்பதாகவும், அந்த தொகையை மீட்கும் முயற்சியில் கடத்தல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் கடத்தப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.