![quarry Incident in karnataka](http://image.nakkheeran.in/cdn/farfuture/K8NaYxIzDEYGUbW-MJjt7XLXVUliV9Qd_fja3FTWmIs/1646456557/sites/default/files/inline-images/DTFE.jpg)
கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்க்கையில் பாறைகள் சரிந்து ஒரே நேரத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் கும்பகல்லு எந்த கிராமத்தை ஒட்டியுள்ள ஸ்ரீராம குன்று என்ற பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மலைப்பகுதியில் மகேந்திரப்பா என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் கேரளாவை சேர்ந்த ஹக்கீம் என்பவர் அரசின் அனுமதியுடன் குத்தகைக்கு எடுத்து கல்குவாரி நடத்தி வந்தார். இந்த கல்குவாரியில் கர்நாடகா, தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். வெடி வைத்து பாறைகளைத் தகர்க்கும் பணி நடைபெற்றது. ஏராளமான டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கல்குவாரிக்கு வந்திருந்த நிலையில் நேற்று மாலை கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடியின் அதிர்வில் பெரிய பாறாங்கல் ஒன்று உடைந்து சிதறியது.
இதில் கீழே கற்களை உடைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் இதுவரை 5 பேரை பலத்த காயங்களுடன் மீட்டு மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடும் என கூறப்படும் நிலையில் போலீசார் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.