2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முதல்முறையாக காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டை 'டேப்லட்' (Tablet PC) மூலம் தாக்கல் செய்தார்.
காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூபாய் 140 கோடி மிச்சமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி 'ஸ்மார்ட் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் நாம் பெரும் சேதத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கும். கரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை விரைவாகக் கொண்டு வந்துள்ளது. கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.