கேரள மாநிலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய ஐந்து மாவட்டங்களில் 6,910 வார்டுகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இந்த பகுதிகளில் மொத்தம் 88,26,873 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 42,530 பேர் புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 10- ஆம் தேதி எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது. அதேபோல், மூன்றாம் கட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 14- ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.
தேர்தல் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 16- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கேரள மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.