கேரளாவைச் சேர்ந்த மக்களவை எம்.பியான ஹிபி ஈடன், 'ஹிருதயத்தில் ஹிபி ஈடன்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 100 நோயாளிகளுக்கு இலவசமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை நேற்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், வாழ்க்கை முறை நோய்களை விரைவில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க, அனைத்து வீடுகளிலும் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டோரின் டேட்டாபேஸ் தயாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "இதய நோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் போன்ற வாழ்க்கை முறை நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, அனைத்து வீடுகளிலும் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோரின் டேட்டாபேஸ் தயாரிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் பஞ்சாயத்து அளவில் இது தயார் செய்யப்படும்.
கேரளாவிலும் புற்றுநோய் பதிவேடு அல்லது டேட்டாபேஸ் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும். அரசாங்கம் தற்போது அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது" என்றார்.