பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அதை கேரள அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் ‘ஷங்கு’ என்ற குட்டி குழந்தை படிக்கிறார். இவன் தனது தாயிடம், ‘அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’ என்று தனது குழந்தை மொழி பாஷையில் மிகவும் அப்பாவி போல் கேட்கிறான். அந்த தாயும், அதை தருவதாக ஒப்புக்கொண்டு உப்புமாவை ஊட்டினார். இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் குழந்தையின் தாய் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை திரும்ப திரும்ப பார்க்க தோன்றியது. இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, குழந்தை சங்குவின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த, கேரளா சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கேரளா அமைச்சர் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது, “அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு, அப்பாவித்தனமாக கோரிக்கை விடுத்துள்ளான். அதை வீடியோவாக எடுத்து அவரது தாய் உலகம் முழுவதும் தெரிய வைத்திருக்கிறார். ஷங்குவின் தாயார் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அதே போல், ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக்கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும். இதை ஷங்கு உள்பட எல்லா குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.