கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அம்மாநிலம் முழுவதுமே கடும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
இதில் நிலாம்பூர் அருகே உள்ள கவலப்பாரா என்ற சிறிய கிராமம் முழுவதுமாக நிலச்சரிவில் புதைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் கேரளாவில் மொத்தம் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நிலச்சரிவு காரணமாக இதுவரை சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூதானம், கவலப்பாரா ஆகிய இரண்டு சிறிய கிராமங்கள் முற்றிலும் நிலச்சரிவில் புதைந்துள்ளது. இதில் கவலப்பாரா கிராமத்தில் உள்ள 36 வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. இதுவரை 2 குழந்தைகள் உள்பட மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல பூதானம் கிராமத்தில் பலி எண்ணிக்கை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள இந்த சூழலை லிரண்டு கிராமங்கள் முற்றிலும் புதைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.