இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு 1951 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக மத்திய அரசு NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, இந்திய குடிமக்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட உள்ளன. அஸ்ஸாம் தவிர நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் என்.பி.ஆர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என இந்திய பதிவாளர் ஜெனரலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான விவேக் ஜோஷி சமீபத்தில் தெரிவித்தார். அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை வீடு வீடாக கணக்கெடுப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. "குடியுரிமைச் சட்ட திருத்தம் ஏற்படுத்திய தாகத்திற்கு பின்னர், என்.ஆர்.சி தயாரிப்பதற்கு வசதியாக என்.பி.ஆரைப் புதுப்பிப்பதற்கான இந்த செயல்முறைக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. NPR தொடர்பான பணிகளை மேற்குவங்க அரசு ஏற்கனவே நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.