ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக உருவாக்க மத்திய அரசு எடுத்த முடிவு குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (08/08/2019) இரவு 08.00 மணியளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A தடையாக இருந்ததாகவும், தற்போது இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்கள், கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்கள் காஷ்மீர் மக்களிடையே போய் சேரும் என தெரிவித்தார். இதனால் காஷ்மீர் மாநிலம் விரைவாக வளர்ச்சியடையும் என்று கூறினார். மேலும் மாநிலத்தில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் என காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் உறுதியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது குறித்தும் பேசினார். இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கப்படும் எனவும், இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் வேலை வாய்ப்பு பெருகும் என தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்திற்கான யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது எனவும் குறிப்பிட்டார். மேலும் மாநில மக்களுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இது போன்ற பல விஷயங்களை நாட்டு மக்களுக்கு விளக்கினார். பிரதமர் நரேந்திர மோடி சுமார் 39 நிமிடங்கள் உரையாற்றினார்.
பிரதமரின் உரையை முக்கியமாக கவனிக்க வேண்டிய மாநிலம் காஷ்மீர் என்பது அனைவருமே அறிந்தது. ஆனால் அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு, தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு, இணைய தள சேவை துண்டிப்பு, சமூக வலைத்தளங்கள் துண்டிப்பு காரணமாக பிரதமரின் உரையை காஷ்மீர் மக்களால் கேட்க முடியவில்லை. பிரதமரின் உரையானது முழுக்க முழுக்க காஷ்மீர் மக்களுக்காக இருந்தது. பிரதமர் உரையை சம்மந்தப்பட்ட காஷ்மீர் மக்கள் கேட்க முடியவில்லை என்ற செய்தி மற்ற மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காஷ்மீர் மசோதாக்கள் குறித்த தகவல் காஷ்மீர் மக்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மக்களுக்காக மீண்டும் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.