மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பையொட்டி, பல்வேறு மாநிலங்களில் சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் ஊர்திரும்ப அனுமதி வழங்கியது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலமும் இந்தத் தொழிலாளர்களை பஸ் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவருகிறது.
அதேபோல பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்திலும் லட்சக்கணக்கான பிற மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்திருந்தனர். கர்நாடகாவிலிருந்து பீகார் திரும்ப மட்டும் 53,000 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையொட்டி இந்த மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் செல்ல ரயில்வேயில் புகைவண்டி அனுப்பக் கோரி கர்நாடக மாநிலம் முன்பதிவு செய்திருந்தது.
இதற்கிடையில் இத்தனை லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினால் கர்நாடகாவில் நடைபெறும் பல்வேறு கட்டட வேலைகள் இடையிலேயே நின்றுவிடும். இதனால் தனியார் கட்டடத் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும், அரசுக்குமே இடையூறு வருமென கர்நாடக ரியல் எஸ்டேட் அமைப்பு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்து முறையிட்டது.
இதையடுத்து தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தி இங்கேயே தங்கவைக்கவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முதல்வர் உத்தரவிட்டார். தொழிலாளர்கள் ஊர்திரும்ப பதிவுசெய்த ரயில்களையும் ரத்துசெய்யும்படி ரயில்வேக்கு கர்நாடக அரசு மனு செய்தது.
இது வெளிமாநிலத் தொழிலாளர்களிடையேயும், தொழிலாளர்களுக்காகப் போராடும் சமூக அக்கறையுள்ள நபர்களிடமும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. “இது ஜனநாயகப்பூர்வமற்ற செயல். அரசே தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதற்கு ஒப்பாகும். கூடுதல் ஊதியம், வசதி செய்துதந்து விருப்பமுள்ளவர்களை வேலைசெய்யச் சொல்லவேண்டும். ஊர்திரும்ப விரும்புபவர்களுக்கான ரயிலை ரத்துசெய்வது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்” எனக் கர்நாடக வழக்கறிஞரான சஞ்சய் ஹெக்டே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.