கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த ஆண்டு 8.5 லட்சம் மாணவர்கள் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த முடிவுகளில் இரண்டு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தனர்.
இந்தத் தேர்வில் கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளியில் பயின்ற முகமது கைஃப் முல்லா எனும் மாணவர் 625 மதிப்பெண்களில் 624 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதாவது அறிவியல் பாடத்தைத் தவிர மற்ற அனைத்து பாடங்களிலும், முழு மதிப்பெண்ணை அவர் பெற்றிருந்தார். இருந்தாலும், மனம் தளராமல் மறுகூட்டலுக்காக அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அறிவியல் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம் மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த முகமது கைஃப், அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த பெருமையைப் பெற்றார். மேலும், ஏற்கெனவே முதலிடத்தைப் பிடித்த யஷாஸ் மற்றும் சுதர்ஷன் ஆகிய மாணவர்களுடன் முகமது கைஃப் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார்.