கர்நாடகாவில் மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பமான சூழல் நீடித்து வரும் நிலையில் மாநில காங்கிரஸ் கட்சியின் கமிட்டியை கலைத்து டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக என எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி குமாரசாமி கர்நாடகா முதல்வராக பதவியேற்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என கூறி வருகின்றனர்.
அதே போல் குறைவான எம்எல்ஏக்கள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவியா என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் குமாரசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரடியாக விமர்சித்து வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பொதுக்கூட்டங்களில் முதல்வர் குமாரசாமி ஆட்சி தரும் அழுத்தங்கள் குறித்து வேதனையுடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி படுதோல்வியை தழுவியது.
இதற்கு இரு கட்சித்தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல் தான் காரணம். டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, ராகுலிடம் கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து எடுத்துரைத்தார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அறிவித்தது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் செயல் தலைவர் நீடிப்பார்கள் என அம்மாநில பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.