இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் கர்நாடகா மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தலா ஒருவரும் போட்டியிட்டனர். அதில், காங்கிரஸ் வேட்பாளர்கள் அஜய் மக்கான், சையத் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர்.
அதன்படி, கர்நாடகா சட்டசபையான பெங்களூர் விதானசவுதாவில் காங்கிரஸ் கட்சியினர், வெற்றிப் பெற்ற வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேனை சூழ்ந்து அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கிருந்த சிலர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனக் கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராய்ச்சூர் பகுதியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் மே 7ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் மூன்றாம் கட்டத் தேர்தலையொட்டி காங்கிரஸ், பா.ஜ.க, ம.ஜ.க ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று (03-05-24) கர்நாடகா வீட்டு வசதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், ராய்ச்சூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “நாம் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். போலீஸ் அவர்களை சுட வேண்டும். அந்த மக்கள் அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தின் மூலம் திருத்தம் கொண்டு வர வேண்டும். யாராவது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினால் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும்” என்று கூறினார்.