கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகாரில், செப்டம்பர் 24ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத இரண்டு பேர் மசூதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டு மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், , சம்பந்தப்பட்ட 2 பேரை பிடித்து, இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 447 (குற்றவியல் அத்துமீறல்), 505 (பொது தீமைக்கு வழிவகுக்கும் பேச்சுகள்), 506 (குற்றவியல் மிரட்டல்), 34 (பொது நோக்கம்) மற்றும் 295 ஏ (மத உணர்வுகளை அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யுமாறு கர்நாடகா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு, நீதிபதி எம்.நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்களை எழுப்புவது, எந்த வகுப்பினரின் மத உணர்வை சீர்குலைக்கும் என்பது புரியவில்லை. அந்தப் பகுதியில் இந்து-முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள் என்று புகார்தாரரே கூறும்போது, இந்தச் சம்பவம் கற்பனையில் கூட விளைவை ஏற்படுத்தாது.
295 ஏ பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் இந்திய தண்டனை சட்டம் 295 ஏ பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது. அவ்வாறு கூறப்படும் குற்றங்களில் எந்த மூலப்பொருளையும் கண்டறியாமல், இந்த மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதுப்பதி நீதி தவறிழைக்கும் செயலாகும்’ என்று தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபதி செய்து உத்தரவிட்டார்.